மௌனத்தில் ஒரு கவி!

கள்ளலைகள் பாய்கின்ற கண்னோரம் சாய்ந்துவிட்டு
       கனவோடு வசித்திடவே ஓராசை!- காதல்
கல்லறையில் பிணமாக பேராசை!

மீட்டிவிட்ட வீணையந்த மங்கையவள் மேனிதொட்டு
       மஞ்சத்தில் மலராக்க கனவுண்டு!- அந்த
திட்டத்தில் இரவுக்கும் பங்குண்டு!

சிலையான உணர்விற்குன் நினைவாலே உயிரூட்டி
       செந்நீராய் கண்ணோடு கசிகின்றேன்!- சோக
உலையாகி சுகசூட்டில் வசிக்கின்றேன்!

வான்வீட்டில் பந்தலிட்டு கோதையவள் கோலமிட
       விண்மீன்கள் விரல்தொட்டு புள்ளிவைத்தேன்!- அன்று
நான்கண்ட கனவிற்கு கொள்ளிவைத்தேன்!

தேனினிக்கும் பாலுக்குள் காய்கின்ற கருநிலவை
        திரைமூடி திறப்பதந்த இமைகள் போலும்!,
கனிக் கண்ணிரெண்டும் அதனுக்கே உவமையாகும்!

இழைநூலாய் என்னுயிரை கழுத்ததனில் கட்டிவிட்டு
        ஊஞ்சலென உன்நினைவு தினமாடும்!- இந்த
ஏழைமகன் இதயத்தின் கனம்கூடும்!

நெஞ்சுக்குள் இதுவரையில் தோன்றாத கனவொன்றா
        நிஜத்தினிலே பெண்ணுக்குள் இனிபிறக்கும்- மலர்
மஞ்சத்தில் கேள்விக்கு விடையிருக்கும்!

உயிரற்ற உறுப்பொன்றாய் என்னிதயம் மாறிவிட்ட
        உண்மையினை என்னவென்று நான்சொல்ல!- என்றன்
மயிரனுக்கள் கனக்கின்ற மாயமென்ன?

சொர்கத்தை தேடிக்கொண்டுன் இடைத்தேடி இமைமூடி
        சொப்பனத்தில் சுகம்சேர்த்தேன் சிலநேரம்!- பூவையவள்
பார்வையிலே பனியுதிரும் விழியோரம்!

கனவலைகள் பாய்ந்துவர இதையக்கரை கரைந்திடுமோ?
         கண்ணீரால் என்கனவை இறைக்கின்றேன்!- உந்தன்
நினைவதனை உயிருக்குள் சிறைகொண்டேன்!

மெல்லினமாய் பெண்ணினமென் காதோரம் பேசிவந்த
         மௌனத்தை மொழிகளினால் சொல்லிவிட்டேன்!- காதல்
கல்லறைக்கு அவள்பெயரை சூட்டிவிட்டேன்!

                                                                                                                   -ச.மீ.லோகேஷ்