Saturday, September 11, 2010

நினைவுகளே!!!

முதல் முறையாக ஒரு பாடல் (மெட்டுக்கு) எழுதினேன். அன்பு நண்பர் இளவரசன் இசையில் அமைந்த பாடல் அது. கல்லூரி வாழ்க்கையின் அழகை எழுத வேண்டும். முடிவடையும் பொழுது தான் தொடக்கத்தின் அழகு புரியும் என்பார்கள். அது எல்லா விஷயத்திற்கும் பொருந்தும். ஒரு கல்லூரி Farewell'லுக்காக தயார் செய்ய வேண்டிய பாடல். எனக்கு பாடல் எழுதிய அனுபவம் கிடையாது. அழகான நினைவுகளை எப்படி எழுதினாலும் அழகு சேர்ந்துவிடும் என நம்பினேன்.

இந்த பாடலில் ஆண்களின் நினைவுகளை மட்டுமோ அல்லது பெண்களின் நினைவுகளை மட்டுமோ பதிவு செய்துவிட கூடாது. ஆண், பெண் யார் கேட்டாலும் இது தங்களுக்காக இயற்ற பெற்றது என எண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படியே இயற்றினேன். 'கல்லூரி' என்ற சொல்லை தவிர்ககவும் தீர்மானித்தேன்.

கல்லூரி நாட்களில் அங்கு படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் ஒவ்வொரு கவலைகள் இருக்க கூடும். சிலருக்கு பணம் சிலருக்கு குடும்பம் என எத்தனை கவலைகள் இருந்தாலும், வகுப்பறைக்குள் எல்லோரும் கவலை மறந்து சிரித்திருபோம். அழுகின்ற மழைத்துளிகளின் நடுவிலும் சிரிக்கின்ற மின்னலை போல. ஆனால் கல்லூரி முடிந்து புது வாழ்க்கை தொடங்கும் பொழுது பிரிவினை எண்ணி அழுகின்றோம். விடியல் வருவது கூட தெரியாமல் சிரிக்கின்ற மலர்கள் மீது அழுகிறதே பனித்துளி அது போல. இதை முதல் சரணத்தில்

"வாழ்க்கை என்னும் மேகம்
கோடி துளிகள் தூவும்
அழுகின்ற மழையில் சிரிக்கும்
மின்னல் ஆகினோம்!

இரவு முடியும் நேரம்
இரண்டு விழியில் ஈரம்
இது என்ன சிரிக்கும் மலரில்
பனியாய் அழுகிறோம்!"

என எழுதியிருந்தேன். பாடலும் பதிவானது. முதல் பாடல் என்பதால் பிழைகள் இருக்கலாம் சில குறைகள் இருக்கலாம். பிழை இருந்தால் மன்னிக்கவும்.

பாடல்

இசை: இளவரசன்
பாடகிகள்:- சுவேதா, காயத்ரி, நித்யா, விஜயலக்ஷ்மி, ஸ்ருதி.

பல்லவி:-

ஒரு முறை- மீண்டும்
மறுமுறை
ஈர நினைவினில்
மிதப்போம் வா!

கனவுகள்- சோக
கவலைகள்- தாண்டி
அரைநொடி
வாழ்வோம் வா!

நீண்ட மரத்தின் நிழலில்
நாட்கள் நகர்த்தினோம்!
நீல கடலின் அலைபோல்
நித்தம் ஆடினோம்!

வளைகின்ற நதியைப் போல
வாழ்க்கை வாழ்கிறோம்!
கரை சேரும் நேரம்- கண்ணீர்
விட்டுக் கரைகிறோம்!

இன்று வரும் தென்றல் காற்று
மௌனம் தாங்கி வருதே!
பூக்களின் மொழியை கேட்டு
மௌனம் சிதறுதே!

சரணம்-1:

வாழ்க்கை என்னும் மேகம்
கோடி துளிகள் தூவும்
அழுகின்ற மழையில் சிரிக்கும்
மின்னல் ஆகினோம்!

இரவு முடியும் நேரம்
இரண்டு விழியில் ஈரம்
இது என்ன சிரிக்கும் மலரில்
பனியாய் அழுகிறோம்!

முதல் முறை பேரை கேட்டு
பிறந்தது எங்கள் நட்பு!
கடைசியில் கண்ணீர் விட்டு
பிரிவதே கால கூற்று!

நட்பென்னும் உறவின் அழகை
பிரிவே சொல்லுமே!

சரணம்-2

தூவும் மழையில் நனைந்தோம்!
கூவும் குயிலாய் திரிந்தோம்!
காற்றென உலவும் நெஞ்சில்
சுமைகள் இல்லையே!

உண்ணும் உணவில் கொஞ்சம்
இன்ப துன்பம் கொஞ்சம்
பரிமாறிக்கொள்ளும் நட்பில்
சோகம் இல்லையே!

வலவல அரட்டைகள் எங்கே?
வகுப்றை குறட்டைகள் எங்கே?
தீயெனும் கோபங்கள் எங்கே?
பூவெனும் புன்னகை எங்கே?

இன்னொரு ஜன்மம் கேட்டு
இங்கே தேடுவோம்!