மௌன தீ!


மலை உச்சி நான்!
என் அத்தனை
வார்த்தைகளையும்
புறம் தள்ளிவிடும்
எதிரொலி நீ!

'மௌனம்'
அது
தாய்மொழி உனக்கு!- பெரும்
தலைவலி எனக்கு!

பிரபஞ்சத்தின் பேரழகை- உன்
பாதி சிரிப்பில் காட்டிவிட்டு!
பித்தம் கொண்ட என் மனதை- உன்
மீதி சிரிப்பில் வாட்டிவிடுகிறாய்!

என் கவிதைகளின் கேள்விகளுக்கு
நீ மௌனங்களால் பதிலெழுதுகிறாய்!

மௌனம் என்பது பதிலல்ல
'புதிர்'.

நித்தம் உள் மனதில்- பல
யுத்தம் வெடிக்கையிலும்
என்
ரத்த அணுக்களில்
நீ
ரகசியமாய் சிரிக்கிறாய்!

கனவிலே
உன் கண்கள்
எனை
கவிஞனாக்கி விடுகிறது!
நேரிலே
உன் கண்கள்
எனை
ஊமையாக்கி விடுகிறது!

பேரழகை உனக்கென்றும்
பேராசையை எனக்கென்றும்
சொத்தெழுதியது காலம்!

நிசப்தங்களின் முகவரி நீ!
நிராசைகளின் நடைபாதை நான்!

வாய் இருந்தும் ஊமை நீ!
வாய்ப்பிருந்தும் ஏழை நான்! 

வார்த்தை வரம் தந்துவிட்டு
வாட்டும் துயர் போக்கிவிடு!
வார்த்தை ஒன்றும் இல்லையெனில்
வந்து என்னை தூக்கிலிடு!


No comments:

Post a Comment