Sunday, May 16, 2010

கவிமழலை

நாவுரைக்கும் மொழியெல்லாம் நடைபழகும் நயமென்று
மூவுலகும் கேட்கும்படி முழங்கச்சொல் என்வேந்தே!

கற்ற கவிமேதை கடலென்றே விரிந்திருக்க
அற்பக் கவிஞன்நான் கவிமழலை பேசுகிறேன்.

அழகியமலரே! உன்னை முழுதாய் இலையென்றாலும்
பழகிய தமிழில்நான் பாடிப் புனைகின்றேன்.

முல்லை மலரொடு மூடிவைத்த மணமெல்லாம்
சொல்லுடன் ஆடவைத்து சுககவியை 'கொடு'(த்)தாயே!

விண்விட்டு வெண்ணிலவுன் பொன்பட்டப் பாதத்தில்
கண்தொட்டு வணங்கும் பைந்தமிழே! உன்புகழை

வெண்பட்டுத் திரைமீது விரல்தொட்டு நானெழுத
என்பாட்டில் நீவந்து எழுந்தாடு முத்தமிழே!

ஆடிப் பாடியிங்கு அரைகுறையாய் வாழ்ந்தவனை
தேடி வந்தாயே தேன்தமிழே! தலைமகளே!

அழைத்து வெண்ணிலவை பொன்னொடு பூச்சேர்த்து
குழைத்து மேனியெங்கும் இழைத்த அழகென்றே

தோன்றிய எழில்மகளே! தேவர் குலத்தாளே!
ஈன்று எனையெடுத்து தமிழென்னும் பாலூட்டி

உடலோடு கவியை உறவாடச் செய்தாயே!
கடலாடும் அழகை கற்பனையாய் நெய்தாயே!

காலை கண்விழித்து கதிரவன் வலம்முடித்து
மாலை மயக்கத்தில் மலைமீது முத்தமிட

நாணிச் சிவக்கிறதோ நித்தமடி வானமென
ஊனில் கிடந்த உயிர்த்தமிழை தினம்கேட்டு

மயங்கிவிட்ட நினைவுகளை மௌனமாய்ப் பேசவைத்துத்
தேயாத கனவுகளைத் தமிழோடு சேர்த்துவிட்டேன்!

No comments:

Post a Comment